ஹிந்து வாலிபருடன் காதல் திருமணம் நடைபெறவிருந்த முஸ்லீம் பெண்ணை, போலீஸார் வலுக்கட்டாயமாக பிரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கோவளம் கே.எஸ்.ரோட்டைச் சேர்ந்த அகில். ஹிந்து மதத்தைச் சேர்ந்த இவர், காயம்குளத்தைச் சேர்ந்த அல்ஃபியா என்கிற முஸ்லீம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இக்காதலுக்கு அல்ஃபியாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, அகிலுடன் வாழ முடிவு செய்த அல்ஃபியா, கடந்த 16-ம் தேதி கோவளம் வந்தார். இதையறிந்த அவரது பெற்றோரும் கோவளம் வந்து போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து, அல்ஃபியா மற்றும் அகிலின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த கோவளம் எஸ்.ஐ., பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அகிலுடன் செல்வதில் அல்ஃபியா உறுதியாக இருந்ததால், அவரது விருப்பப்படியே போலீஸார் அகிலுடன் செல்ல அனுமதி வழங்கினர். இதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி மாலை 5 மணியளவில் கோவளம் கே.எஸ்.ரோடு மளவில பனமூட்டில் உள்ள ஸ்ரீமதன் தம்புரான் கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால், திருமணத்திற்கு முன்னதாக, காயங்குளத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ் டீம், கோயிலுக்கு அத்துமீறி நுழைந்து அல்ஃபியாவை வலுக்கட்டாயமாக கோவளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது.
இதையடுத்து, அகில் மற்றும் அவரது உறவினர்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அங்கு, அகிலுடன் செல்ல அல்ஃபியா விருப்பம் தெரிவித்த போதிலும், காயம்குளம் எஸ்.ஐ. மற்றும் அவரது குழுவினர் அல்ஃபியாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, கோயிலுக்குள் பூட்ஸ் காலோடு நுழைந்த எஸ்.ஐ.க்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக புகார் அளிக்க கோயில் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.