தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புடன் கேரள மாநில போலீஸார் 873 பேர் தொடர்பில் இருந்ததாக, அம்மாநில டி.ஜி.பி.யிடம் என்.ஐ.ஏ. பட்டியல் கொடுத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பினர் மீது நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, முஸ்லீம் நாடுகள், அமைப்புகளிடமிருந்து நிதி திரட்டி பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவது, முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு அவ்வப்போது ரெய்டு நடத்தி, பி.எஃப்.ஐ. அமைப்பினரை கைது செய்து வந்தது. மேலும், பி.எஃப்.ஐ. பற்றி ரகசிய கள ஆய்வைுயும் நடத்தியது.
இதில், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 22-ம் தேதி நாடு முழுவதும் 15 மாநிலங்களில், 93 இடங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மாஸ் ரெய்டை நடத்தியது. இதில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, மாநில உளவுப் பிரிவு போலீஸார் ஆகியோரும் ஈடுபட்டனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆயுதங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, 120 கோடி ரூபாய் ஹவாலா மூலம் பரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பினரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் மேலும் 9 மாநிலங்களில் ரெய்டு நடத்தியது. இதிலும், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ. கொடுத்த ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்தது மத்திய அரசு. இந்த சூழலில்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 873 போலீஸார், பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, அம்மாநில டி.ஜி.பி.க்கு என்.ஐ.ஏ. பட்டியல் அனுப்பி இருப்பதாகத் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே, கேரள மாநிலம் தொடுபுழா அருகே உள்ள கரிமண்ணூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் பட்டியலை சேகரித்து பி.எஃப்.ஐ. நிர்வாகிகளுக்கு வழங்கிதாக கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, மூணாறு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 3 போலீஸார், பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான், அம்மாநிலத்தைச் சேர்ந்த 873 போலீஸார், தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.