தி.மு.க. ஊடகங்களான சன் நியூஸ், கலைஞர் செய்திகள் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் பொய்ச் செய்தியை வெளியிட்டது பேக்ட் செக் மூலம் அம்பலமாகி இருக்கிறது.
அரபு நாடான கத்தாரில் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை. எனினும், இந்தியாவிலுள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைக் கொண்ட நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி, அந்நாடுகளின் கொடிகளையும், பேனர்களையும் ஆங்காங்கே வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆதரவாக போர்ச்சுகல் நாட்டின் கொடியை கட்டி வைத்திருந்தனர்.
இந்த சூழலில், குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர் அந்தக் கொடியை கிழித்து எறிந்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. உடனே, அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்றும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடி என்று நினைத்து, போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை கிழித்து எறிந்ததாகவும், தமிழ்நாட்டிலுள்ள தி.மு.க.வின் ஊடகங்களும், ஆதரவு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. குறிப்பாக, தி.மு.க. ஊடகமான சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஆதரவு ஊடகங்களான மின்னம்பலம் மற்றும் ஒன் இந்தியா ஆன்லைன் சேனல்கள் ஆகியவை செய்தி வெளியிட்டன. மக்களும் இதை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், காவி நிற சட்டை அணிந்த ஒருவர் தலையில் கட்டுப்போட்ட நிலையில், ஒரு புகைப்படம் வெளியானது. இதையடுத்து, போர்ச்சுக்கல் நாட்டுக் கொடியை கிழித்த பா.ஜ.க. தொண்டரை, கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறி, பா.ஜ.க. தொண்டரை தாக்கிய கால்பந்து ரசிகர்கள் என்கிற தலைப்பில் தி.மு.க. ஊடகங்களான சன் நியூஸ், கலைஞர் செய்திகள் ஆகிய டி.வி. சேனல்களும், மின்னம்பலம் ஆகிய ஆன்லைன் சேனல்களும் செய்தி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, யுடர்ன் என்கிற பேக்ட் செக் நிறுவனம், இச்செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறிய களமிறங்கியது.
முதலில், கேரள மாநிலம் பானூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது, ”போர்ச்சுகல் நாட்டின் கொடி கிழிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதன் தொடர்ச்சியாக எந்த வன்முறையும், தாக்குதலும் நடைபெறவில்லை. அந்த நபர் தாக்கப்பட்டதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து, பா.ஜ.க. நபர் போர்ச்சுகல் கொடியை கிழித்ததாக செய்திகளில் வெளியானதால், பா.ஜ.க. பானூர் மண்டல பொறுப்பாளர் ஷிஜி லாலை தொடர்பு கொண்டு பேசியது. அதற்கு, ”சம்பந்தப்பட்ட நபருக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பா.ஜ.க. உறுப்பினர்கூட இல்லை. இதன் தொடர்ச்சியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தனிப்பட்ட முறையில் அவரே சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, வைரலான வீடியோவில் இடம்பெறிருக்கும் நபரும், தாக்கப்பட்டதாக செய்தி பரவும் புகைப்படத்தில் இருக்கும் நபரும் வெவ்வேறு நபர்கள் என்பது தெளிவாகிறது. அதேபோல போர்ச்சுகல் நாட்டின் கொடியை எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் கொடி என்று நினைத்து கிழித்தெறிந்த நபரும் பா.ஜ.க. தொண்டர் இல்லை என்பதும் நிரூபணமாகி இருக்கிறது. மேலும், தாக்கப்பட்ட நபரும் பா.ஜ.க. தொண்டர் இல்லை என்பதும் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கால்பந்து ரசிகர்களால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்தியும் தவறானது. ஆக மொத்தத்தில், தி.மு.க. ஊடகங்களும், ஆதரவு ஊடகங்களும் வெளியிட்ட செய்தி பொய்யானது என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
உண்மையான செய்தியை அறிந்துகொள்ள இதோ லிங்க்…
/https://youturn.in/factcheck/kerala-bjp-portugal-flag-torn-beaten.html