ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை!

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை!

Share it if you like it

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) பிரமுகர். இவர், இன்று மதியம் கடையில் இருந்திருக்கிறார். அப்போது, 3 பைக்குகளில் 6 பேர் வந்திருக்கிறார்கள். திடீரென 5 பேர் கடைக்குள் புகுந்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் சுதாரிப்பதற்குள் 5 பேரும் சேர்ந்து கத்தி, அரிவாள், பிச்சுவா போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள். இதில், ஸ்ரீனிவாசனின் உடலில் 20 இடங்களில் வெட்டிக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஸ்ரீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்து விட்டார். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) பிரமுகர்கள் என்பது தெரிவந்திருக்கிறது.

அதாவது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிளை அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயலாளர் சுபைர் என்பவர் நேற்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மசூதியிலிருந்து வெளியே வந்த சுபைர் தனது டூவீலரை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது, ​​காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரது வாகனத்தின் பின்புறம் மோதி இருக்கிறார்கள். பின்னர், காரில் இருந்து இறங்கிய 5 பேரும் சுபைரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலைக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், இதை பாலக்காடு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.எம்.ஹரிதாஸ் மறுத்ததோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எந்த கொலையிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று மதியம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே, பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இக்கொலை பார்க்கப்படுகிறது.

இதேபோல், கேரளாவில் 2021 நவம்பரில் 2 அரசியல் கொலைகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்சித் என்பவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அதேவாரத்தில் எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதேபோல அரசியல் கொலைகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு கேரள மாநில அரசும், மத்திய அரசும் முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.


Share it if you like it