சபரிமலை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுந்தரவள்ளிக்கு 3,500 ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக, கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழி மாதம் நடக்கும் மகரஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்வர். அதேசமயம், இக்கோயிலுக்கு 10 முதல் 50 வயதுவரையுள்ள பெண்கள் செல்ல அனுமதி இல்லை. எனவே, பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பெண்ணுரிமை போராளிகள் சிலர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தாக்கி கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதையும் மீறி சில பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தனர். இதற்கு கேரள மாநில அரசு ஆதரவாக இருந்தது. சபரிமலைக்குச் செல்லும் பெண்களுககு பாதுகாப்பு அளித்தது. அதேசமயம், ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பெண்கள், சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சூழலில், கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் பெய்த பலத்த மழையால், பம்பை நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஐயப்ப பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது குறித்தும், சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுந்தரவள்ளி. இது குறித்த புகாரின் பேரில் சுந்தரவள்ளி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், சாட்சியங்களோடு ஆதரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, சுந்தரவள்ளிக்கு ரூ. 3,500 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சுந்தரவள்ளி ஒரு பெரியாரிஸ்ட். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடவுள்களை அவமதித்திருக்கிறார். தற்போதுதான் அவருக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.