எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. ஆகிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள்தான் என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேனாரி மண்டலத்தின் பொறுப்பாளராக இருந்தவர் சஞ்சித். இவர், கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது மனைவி ஆர்ஷிகாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் பைக் மீது மோதியது. இதில், நிலைகுலைந்து விழுந்த சஞ்சித்தை அக்கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இவர்கள் அனைவரும், சோஷியல் டெமாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) மற்றும் பாப்புலர் ஃப்ரின்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்த பாலக்காடு மாவட்டம் மேலமுரியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான்.
கேரளா மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பல்வேறு அமைப்புகளில் இயங்கி வரும் மேற்படி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வன்முறை உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ராமநவமி ஊர்வலம், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் போன்றவற்றில் கலவரம் செய்தது இந்த அமைப்பினர்தான் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இந்த பி.எஃப்.ஐ. அமைப்பு பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் தடை செய்ய மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.எஸ்.ரவி, பி.எஃப்.ஐ. அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறியிருந்தார். இதற்கு, அந்த அமைப்பினரும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பி.எஃப்.ஐ. மட்டுமல்ல எஸ்.டி.பி.ஐ. கட்சியுமே பயங்கரவாத அமைப்புதான் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. சஞ்சித் கொலை வழக்கில் அவரது மனைவி ஆர்ஷிகா சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்த நிலையில், மேற்படி மனுவின் மீதான விசாரணையின்போது, இக்கருத்தை நீதிபதி பதிவு செய்திருக்கிறார்.