கேரளாவில் கிறிஸ்துவ சிபிஎம் எம்.எல். ஏ தகுதி நீக்கம்

கேரளாவில் கிறிஸ்துவ சிபிஎம் எம்.எல். ஏ தகுதி நீக்கம்

Share it if you like it

கேரளாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.எல்.ஏ

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.எம்) சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜா. தமிழகத்தை சேர்ந்த ராஜா கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிக்குளம் தொகுதியில் போட்டியிட்டு 7,848 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏவாக பதவி ஏற்கும் போது தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்ற ராஜாவுக்கு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் தேவிக்குளம் தொகுதி பட்டியலனத்தவர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். ராஜா பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் எம்.எல்.ஏ ராஜாவின் வெற்றியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எம்.எல்.ஏ ராஜா கிறிஸ்துவராக மதம் மாறியவர் என்பதால் எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கான தொகுதியில் அவர் போட்டியிட தகுதியானவர் இல்லை என்றும் அவர் போலி சாதி சான்றிதழ் காட்டி தேர்தலில் போட்டியிட்டதாகவும் குமார் குற்றம்சாட்டினார். இதனால் ராஜாவின் வெற்றியை ரத்து செய்து அவருக்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகள் பெற்ற தன்னை தேவிகுளம் தொகுதி எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும் என்று குமார் தன் மனுவில் வலியுறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அதன்படி எம்.எல்.ஏ ராஜா மதம் மாறிய கிறிஸ்துவர் என்பதால் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான தொகுதியில் போட்டியிட தகுதியானவர் இல்லை என்றும் அதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதேசமயம் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் வேட்பாளர் குமாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ராஜாவை தகுதி நீக்கம் செய்ததால், கேரள சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் பலம் 99ல் இருந்து 98 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அதனால் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் ராஜா தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை எம்.எல்.ஏ ராஜா தனது பதவிக்கான எந்த பலன்களையும் அனுபவிக்க முடியாது என்றும் சட்டசபையில் வாக்களிப்பதற்கான உரிமை இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பலர் கிறிஸ்துவராக மதம் மாறிய பின்பும் எஸ்.சி,எஸ்டி பிரிவினருக்கான அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து சட்டவிரோதமாக அனுபவித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது குறித்து தேசியளவில் பல விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக அதிக கவனம் பெற்று வரும் இந்த விவகாரத்தில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவின் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Share it if you like it