தமிழக எல்லைகளை கேரள கம்யூனிஸ்ட் அரசு மறு அளவீடு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசு தமிழக எல்லைகளில் செய்து வரும் அடாவடி தனம் குறித்து பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு வெளியிட்டு இருக்கிறார் ;
தமிழக கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக, ‘இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல.
இது குறித்து நேற்று தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் என்றும் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது. ‘வரும் முன் காப்போம்’ என்றவர்கள் ‘போன பின் பார்ப்போம்’ என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த தி.மு.க. இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மத்திய அரசு, மோடி, அண்ணாமலை என்றால் உடனே குரல் கொடுக்கும் அருணன், கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் அட்டூழியம் குறித்து எப்போது வாய் திறப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.