தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என உறுதியாகக் கூற முடியுமா, இதுதானா உங்க விடியல்? என்று பிரபல நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினாலுக்கு சவால் விடுத்திருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த இவரை, பள்ளி நிர்வாகம் மதம் மாறும்படி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு மறுத்த மாணவியை கழிவறை, விடுதி, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக, தமிழக பா.ஜ.க. சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 22-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, ‘லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன்? மதம் மாறச் சொல்லி துன்புறுத்தியதாக இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. அப்படி இருந்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? இதுதான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்றால், லாவண்யா பேசியது பொய்யா? ஆகவே, லாவண்யாவின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். நியாயத்திற்காக மட்டுமே பா.ஜ.க.வினர் போராடுவார்கள். தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? அப்படி கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா?’ என கேள்வி எழுப்பியவர், ‘மதம் மாறும்படி வற்புறுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கும் தஞ்சாவூர் எஸ்.பி.யை பணி நீக்கம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்’ என்று சவால் விடுத்து பேசினார்.