சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டும் என்றால், நீங்கள் மோடியைக் கொல்ல தயாராக இருக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, 2-வது முறையாக 2019-ம் ஆண்டு பதவியேற்றது. இதன் பிறகு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக, தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். அதேபோல, காங்கிஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை ரஷ்டிர பத்தினி என்று நாடாளுமன்றத்தில் பேசி சர்ச்சையைக் கிளப்பினர். இதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மோடியையும், ஜனாதிபதி முர்முவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பட்டமன்ற பேச்சாளர் நெல்லைக் கண்ணன், ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, மோடியை ஜோலியை முடிச்சுவிடுங்க என்று பேசியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில்தான், காங்கிஸ் கட்சியின் தலைவர் ஒருவர், மோடியை கொல்லுங்கள் என்று பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா, “சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமானால், மோடியைக் கொல்லுங்கள். தேர்தலை அவரே முடித்து வைப்பார், மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவார். அவருடைய ஆட்சியில் பட்டியலின மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். எனவே, தீமையை வெல்ல நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவரும் நரோத்தம் மிஸ்ரா, “பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது ராஜா படேரியா, பிரதமரை கொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். படேரியாவின் இந்த பேச்சு இது மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்த காங்கிரஸ் இத்தாலிக்குச் சொந்தமானது. பிரதமர் மோடி குறித்து இவ்வாறு பேசிய ராஜா படேரியா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு எஸ்.பி.க்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், “பிரதமர் மோடியின் வளர்ச்சி மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், மோடி பற்றி மிகவும் மோசமாகப் பேசி வருகின்றனர். மோடியை கொல்லுங்கள் என்று சொன்ன படேரியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தேசநலன் விரும்பிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.