ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவனும், மாணவியும் அர்ஜென்டினாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதிபெற்று அசத்தி இருக்கிறார்கள்.
பொதுவாக, ஸ்கேட்டிங் விளையாட்டு பற்றி மட்டும்தான் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். சக்கரம் பொருத்தப்பட்ட ஷுவை கால்களில் கட்டிக் கொண்டு சாகசங்களை அரங்கேற்றும் விளையாட்டு. இந்த விளையாட்டு சமதளங்களில் மட்டுமே நடைபெறும். அதேசமயம், இந்த விளையாட்டு சுமார் 10 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கரடு முரடான பாதைகள், மலைப்பாங்கான இடங்களில் நடத்தப்படும் போட்டிக்குப் பெயர்தான் ஆல்பைன் (ALPINE) ஸ்கேட்டிங் என்பதாகும். இந்தியாவில் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், இத்தகைய ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டியை தேர்ந்தெடுத்துத்தான் சாதித்து வருகின்றனர் கோவை மாணவர்கள்.
கோவையைச் சேர்ந்தவர்கள் கவுதம், நவீனா. இவர்களில் கவுதம் 12-ம் வகுப்பு மாணவன். நவீனா 9-ம் வகுப்பு மாணவி. இவர்கள் இருவரும்தான் ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கும் இவர்கள், சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்கள். இதன் விளைவாக, எதிர்வரும் அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறவிருக்கும் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கிறார்கள். தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து பதக்கங்களை பெற்றுவரும் தங்களுக்கு அரசுத் தரப்பில் உதவிகள் கிடைத்தால் சர்வதேச அளவில் பதக்கங்களை பெறுவதற்கு ஊக்கமாக இருக்கும் என்கிறார்கள் கவுதமும், நவீனாவும். மேலும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறார் நவீனா.