தமிழகத்தில் இதே நிலை தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கும்போது சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கும் நிலை வரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்தும், தி.மு.க. அரசின் ஹிந்து விரோத நடவடிக்கையை கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் கோவை சிவானந்தா காலனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலம் மலப்புரத்தில் புகுந்து பல பயங்கரவாதிகளை சி.ஆர்.பி.எஃப். கைது செய்திருக்கிறது. அதேபோல, தமிழகத்திலும் நடக்கும். இதற்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை. தமிழக முதல்வருக்கு சி.ஆர்.பி.சி. பற்றியும், இண்டியன் பீனல் கோடு பற்றியும் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால், எனக்குத் தெரியும். மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆகவே, தமிழத்தில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தமிழக அரசு மட்டுமல்ல, எந்த அரசும் காப்பாற்ற முடியாது.
முதல்வர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் தன்னை அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் தனது அறிக்கையில் பா.ஜ.க.வினர் ஏதாவது செய்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட நினைக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். ஆமாம், நாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது உண்மைதான். இங்கு 1.10 கோடி பேர் மதுவுக்கு அடிமையாகிப் போய் இருக்கிறார்கள். இவர்களை மீட்கவும், தி.மு.க. அமைச்சர்களின் வசூல் வேட்டையை தடுக்கவும், கனிமவள கொள்ளையை நிறுத்தவும் நாங்கள் ஆட்சிக்கு வரவிரும்புகிறோம். பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி எத்தனை முறை பட்டியல் சமூக மக்களை தவறாக பேசி இருக்கிறார். அதேபோல, தி.மு.க., அமைச்சர்கள் ராமசந்திரன், ராஜகண்ணப்பன் போன்ற பலர் ஜாதி பெயரை சொல்லி திட்டி இருக்கிறார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. தமிழகத்தில் இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் நிலை உருவாகும். நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்” என்றார்.