கோவையில் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்த பீர் முகமது என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாநகரம் மிகவும் சென்சிட்டிவான பகுதியாக கருதப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பலரும் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு, கோவைக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வருகை தந்தபோது, வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கோவை மாநகர் மீது என்.ஐ.ஏ. மற்றும் போலீஸார் தனி கண்காணிப்பு வைத்திருக்கின்றனர். இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அரங்கேறியது. விசாரணையில், இது திட்டமிட்ட சதி என்பதும், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் செய்ய செயல் என்பதும் தெரியவந்தது. இதன் பிறகு, கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. வாகனங்கள் அடிக்கடி தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான், டாஸ்மாக் கடைக்கு குண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை குனியாமுத்தூர் பகுதியைச் சேரந்தவர் பீர் முகமது. இவர், மது அருந்துவதற்காக சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். அப்போது, கையில் காசு இல்லாததால் இலவசமாக மதுபானம் கேட்டிருக்கிறார். ஆனால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தர மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பீர் முகமது, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, சுந்தராபுரம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, கோவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மதுக்கடையில் போலீஸார் மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கடையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. ஆகவே, இது வெறும் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பீர் முகமதுவை போலீஸார் கைது செய்தனர். இவர், இதேபோல ஏற்கெனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்திருக்கிறது.