கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரில் கொண்டு செல்லப்பட்ட மர்ம பொருள் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்ற கார், சிலிண்டர் வெடித்ததால் சுக்கு நுாறாக நொறுங்கியது. இச்சம்பவத்தில் காரில் சென்ற உக்கடம் கோட்டைமேட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபீன் என்பவர் பலியானார்.
காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்று போலீஸார் கருதிய நிலையில், தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கிடைத்ததால், போலீஸார் சந்தேகம் அடைந்தனர். காரணம், இப்பொருட்கள் வெடி குண்டுகள் தயாரிக்கவும், அதிக சேதத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என்பதால், கார் வெடிப்பு சம்பவம் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த சதியாக் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், பலியான ஜமேஷா முபீனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடி பொருட்கள் செய்ய பயன்படும் ஏராளமான உபகரணங்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை சிக்கின. மேலும், ஜமேஷா ஏற்கெனவே போலீஸாரின் சந்தேக வளையத்தில் இருந்தவர். தவிர, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். ஆகவே, ஜமேஷா முபீன் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது.,சம்பவத்துக்கு முதல்நாள் இரவு 11:25 மணிக்கு ஜமேஷா முபீன் உள்ளிட்ட 5 பேர் வீட்டில் இருந்து ஒரு மூட்டையை துாக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகி இருந்தது. இதைக் கண்டு போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் இருந்தது வெடி பொருளா… அதை எங்காவது வைத்துள்ளனரா? என்கிற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, ஜமேஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்தனர். இதில், அவரது நெருங்கிய கூட்டாளிகள் 7 பேரை நேற்று இரவோடு இரவாக பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், ஜமேஷா முபீன் மற்றும் அவரது நண்பர்களின் சமூக வலைதள தொடர்புகள் பதிவுகள் அனைத்தும் அலசி ஆராயப்படுகிறது. இதனிடையே, ஜமேஷா முபீனின் கருகிய உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய, பல ஜமாத்துகள் மறுத்து விட்ட நிலையில், இறுதியாக மேட்டுப்பாளையம் ரோடு திப்பு சுல்தான் பள்ளி வாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ் (ஜி.எம். நகர்), பிரோஸ் இஸ்மாயில் (ஜி.எம். நகர்), முகமது நவாஸ் இஸ்மாயில் (ஜி.எம். நகர்) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே, விரைவாக துப்பு துலக்கிய குழுவினருக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.