கோவையில் கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறிய பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை அருகே 3 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
கோவை நகரில் தீபாவளிக்கு முதல்நாள் அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. முதலில் சிலிண்டர் வெடித்ததாகக் கருதப்பட்டாலும், காருக்குள் சிதறிக்கிடந்த ஆணிகள், கோழி குண்டுகள், அது ஒரு பயங்கரவாத சதி என்பதை உணர்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்திருக்கும் போலீஸார், அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இதில், பயங்கரவாத சதி இருப்பது அம்பலமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே அனுமந்தபுரம் பகுதியில் மலைக்குன்று ஒன்று இருக்கிறது. இந்த மலைப் பகுதிக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆடு மாடு மேய்க்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது, மலைக்குன்றின் உச்சியில் 3 ராக்கெட் லாஞ்சர் ரக வெடிகுண்டு (‘பாம்’) கேட்பாரற்று கிடந்திருக்கிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சிங்காரவேலன் தலைமையிலான போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அது ராக்கெட் லாஞ்சர்தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, துறை சார்ந்த கமாண்டோ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு, அந்த ராக்கெட் லாஞ்சர் ரக பாம்கள் செயலிழந்தவையா அல்லது செயல்படக் கூடியவையா என்பதை ஆராய்ச்சி செய்த பிறகுதான், அந்த இடத்தை விட்டு அகற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகவே, இது பயங்கரவாத சதியா என்கிற கேள்வி எழுந்தது. இதனால், அனுமந்தபுரம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த ராக்கெட் லாஞ்சர்களை கமாண்டோ குழுவினர் பத்திரமாக எடுத்துச் சென்றனர். அதேசமயம், மேற்படி ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்ட அனுமந்தபுரம் மலையில்தான் ஏற்கெனவே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்திருக்கிறது. தற்போது இது செயல்பாட்டில் இல்லை. ஆகவே, இவை பயிற்சி முகாமின்போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், கடந்த 3 வருடங்ளுக்கு முன்பு செயலிழந்த ராக்கெட் லாஞ்சர்களை காயலான் கடை வியாபாரி ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தபோது, அது வெடித்ததில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.