ஆன்லைனில் வெடிபொருள்கள்: கோவையில் என்.ஐ.ஏ. முகாம்!

ஆன்லைனில் வெடிபொருள்கள்: கோவையில் என்.ஐ.ஏ. முகாம்!

Share it if you like it

கார் வெடிப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) டி.ஐ.ஜி. வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டிருக்கிறார்கள்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் சென்ற கார், சிலிண்டர் வெடித்து சுக்குநூறாக சிதறியது. இச்சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன், உடல் கருகி பலியானார். முதலில் இது சாதாரண சிலிண்டர் வெடிப்பு என்று கருதிய போலீஸார், பின்னர் காருக்குள் ஏராளமான ஆணிகளும், பால்ரஸ் குண்டுகளும், கோழி குண்டுகளும் இருந்ததால் இது ஏதோ சதிச் செயல் என்று எச்சரிக்கை அடைந்தனர். இதனிடையே, உயிரிழந்த ஜமேஷா வீட்டிலிருந்து ஏதோ மர்ம பொருளை சிலர் தூக்கிச் சென்று காரில் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.

இதையடுத்து உஷாரான போலீஸார், இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் 5 பேர் மீதும் உ.பா. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, வழக்கின் புதிய திருப்பமாக, ஜமேஷா முபீனின் உறவினர் அப்சர்கான் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில், இவர் வெடிபொருட்களுக்கான வேதிப்பொருட்களை ஆன்லைனில் வாங்கியத தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த அமைப்பின் டி.ஐ.ஜி. வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவைக்கு வந்து முகாமிட்டிருக்கிறார்கள். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அதிகாரிகள் நேற்றிரவு கோவை சென்றடைந்தனர். தொடர்ந்து, கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகே உண்மை என்ன என்பது தெரியவரும்.


Share it if you like it