கோவை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர், தங்களது காரை நிறுத்த இடம் இல்லை என்று சொல்லி, பக்கத்து வீட்டின் முன்பாக இருந்த மரக்கன்றுகளை முறித்து அராஜகத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாநகராட்சியின் 34-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த மாலதி. இவர், கவுண்டம்பாளையம் பி.என்.டி. காலனி ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி வசித்து வருபவர் சுபாஷ். சுபாஷ் தனது வீட்டின் முன்பாக 4 வேப்ப மரக்கன்றுகளை வைத்து வளர்த்து வருகிறார். சுமார் 4 முதல் 5 அடி உயரம் வரை வேப்ப மரக்கன்றுகள் வளர்ந்திருந்தன. இந்த நிலையில், சுபாஷ் வீட்டிற்கு வந்த மாலதி, தனது கார் நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மேற்கண்ட வேப்ப மரக்கன்றுகளை அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், சுபாஷ் அக்கன்றுகளை அப்புறப்படுத்த மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாலதி, நேற்று காலை சுபாஷ் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, மரக்கன்றுகளை முறித்து எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை தட்டிக்கேட்ட சுபாஷிடம், நான்தான் மரக்கன்றுகளை முறித்துப் போட்டேன். நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள். யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து பார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை வீடியோவாக பதிவு செய்த சுபாஷ், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், அந்த வீடியோவை அப்படியே சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, தி.மு.க. பெண் கவுன்சிலரின் அராஜகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.