கோவையில் பணத்தை ஏமாற்றிய தி.மு.க. கவுன்சிலரை கண்டித்து, ஒரு குடும்பமே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேடையில் பேசும்போது, அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் இன்று என்ன பிரச்னை செய்து வைத்திருக்கிறார்களோ என்ற அச்சத்துடனேயே எழுவதாகவும், பல நாட்கள் தூக்கமின்றி தவித்திருப்பதாகவும், எனது உடலைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் என்றும் மிகவும் விரக்தியுடன் பேசினார். ஆனாலும், தி.மு.க.வினர் அவரது பேச்சைக் கேட்பதாக இல்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி, அவரை தூங்க விடாமல் செய்து வருகின்றனர். அந்த வகையில், கோவையைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பி ஸ்டாலின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்.
கோவையைச் சேர்ந்தவர் திராவிடன் பன்னீர்செல்வம். இவரிடம் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பித் தரவில்லையாம். பன்னீர்செல்வம், பலமுறை கேட்டுப் பார்த்தும் எந்த பலனும் இல்லையாம். இது குறித்து அமைச்சர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரிடமும் புகார் செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். போலீஸில் புகார் கொடுத்ததற்கும், எந்த நடவடிக்கையும் இல்லையாம். எனவே, கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்திருக்கிறார். இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், விரக்தியடைந்த பன்னீர்செல்வம், தனது குடும்பத்தினருடன் கோவை அவினாசி சாலையில் ஜென்னி கிளம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீஸார், பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பின்னர், பன்னீர்செல்வத்திடம் புகாரை வாங்கிக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு, பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.