நேர்மையாக வேலை செய்தால், பணியிட மாற்றம்தான் பரிசா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனது சாபம் உங்களை சும்மா விடாது என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தி.மு.க. அரசுக்கு சாபம் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் அறிவுடைநம்பி. இந்நகராட்சிக்குச் சொந்தமான குடியிருப்புகளில் ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 11 பேர் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு வீட்டைக் காலி செய்யுமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து, மேற்படி வீடுகளுக்கு சீல் வைக்குமாறு, நகராட்சி கமிஷனர் பாலு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, அறிவுடைநம்பி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், போலீஸாருடன் சென்று மேற்கண்ட 11 வீடுகளுக்கும் கடந்தவாரம் சீல் வைத்தார்.
இந்த நிலையில், திடீரென சம்பந்தமே இல்லாமல் நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறார் அறிவுடைநம்பி. இதுகுறித்து அவர் விசாரித்தபோது, வீடுகளுக்கு சீல் வைத்தது தொடர்பாக ஆளும்கட்சி நிர்வாகிகள் மேலிடத்துக்கு தகவல் கொடுத்து, பணியிட மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. அறிவுடைநம்பிக்கு பல்வேறு வியாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏராளமான மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டு வருகிறார். இந்த சூழலில், அவரை பணியிட மாற்றம் செய்தது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவரது நலம் விரும்பிகள் பலரும் அவரை தொடர்புகொண்டு ஆறுதல் வார்த்தைகளை கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, தற்கொலை முடிவை மாற்றிக் கொண்ட அறிவுடைநம்பி, ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். அக்காணொளியில்தான் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கு அவர் சாபம் விட்டிருக்கிறார். அக்காணொளியில் பேசும் அவர், “நகராட்சி சேர்மன், கமிஷனர் மற்றும் தி.மு.க. நகரச் செயலாளர் ஆகியோரின் உத்தரவுப்படிதான் மேற்கண்ட வீடுகளை பூட்டி சீல் வைத்தேன். இதற்காக என்னை நெல்லியாளம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். நேர்மையாக பணிபுரிந்தால் பணியிடமாற்றம்தான் பரிசா?
நான் நாளொன்றுக்கு எவ்வளவு மாத்திரைகள் சாப்பிடுகிறேன் தெரியுமா? என் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். என் சாபம் உங்களை சும்மா விடாது. அமைச்சரே சொன்னாலும், அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை முதல்வர் விசாரிக்க வேண்டாமா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனது நிறைய பேர் தொடர்புகொண்டு சொன்னதால் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். தவறான முடிவு எடுக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆக திராவிட மாடல் ஆட்சியில் அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை என்று நினைத்தால், நேர்மையாக பணிபுரிபவர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இக்கணொளியை பார்த்துவிட்டு பலரும் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று நக்கலாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.