கோவையில் கலெக்ஷன் பணம் 10 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்த வந்த டாஸ்மாக் சூப்பர்வைசரிடம், அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ளது சிறுமுகை கிராமம். இங்கிருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையின் சூப்பர்வைசராக இருப்பவர் ஊட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த். இவர், கடையில் முதல்நாள் இரவுவரை வசூலாகும் பணத்தை மறுநாள் மதியம் 2 அளவில் எடுத்துச் சென்று மேட்டுப்பாளையத்திலுள்ள இந்தியன் வங்கி கிளையில் செலுத்தி விட்டு வருவது வழக்கம். அந்த வகையில், நேற்று மதியமும் 2 மணியளவில் கடையின் கலெக்ஷன் பணம் 10 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, தனது டூவீலரில் சென்றிருக்கிறார்.
சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே வந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர், விஜய் ஆனந்த் வண்டியை வழிமறித்திருக்கிறார்கள். பின்னர், அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், விஜய் ஆனந்த விடாமல் தடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அக்கும்பலில் ஒருவன் கத்தியால் விஜய் ஆனந்தை வெட்ட முயற்சிக்கிறான். இதனிடையே, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பலரும், அச்சிறுவர்களை விரட்ட முயற்சிக்கவே, அக்கும்பல் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டது.
இதே விஜய் ஆனந்திடம் கடந்த ஜூலை மாதமும் ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்தது. இதுகுறித்து சிறுமுகை காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இக்காணொளிதான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கொள்ளையில் ஈடுபட முயன்ற அனைவருமே மைனர்கள் போலத தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வீடியோ காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருக்கிறது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆரம்பத்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், தினசரி எங்காவது ஒரு மூளையில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தமிழகத்தில் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருந்தார். இச்சம்பவம் அவரது கூற்று முற்றிலும் உண்மை என்பதை உணர்த்துகிறது.