தி.மு.க. ஆட்சியின் அவலத்தால் பள்ளித் தலைமை ஆசிரியை ஒருவர் குமுறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கிராமப்புற பள்ளிக் கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக, சமையல் கூடம் இல்லாததால் கழிப்பறையில் சமையல் செய்து மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் அவலம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சில பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகளுக்கு திறந்த வெளியிலும், மரத்தடியிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இந்த சூழலில்தான், பள்ளியில் எந்த அடிப்படை வசதியுமே இல்லை என்று கிராமசபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியை குமுறி அழுத சம்பவம் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஓலைப்பட்டி கிராமம். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எந்த அடிப்படை வசதியுமே இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஓலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சக்தி, தனது மனக்குமுறலை கொட்டித்தீர்த்து, குமுறி அழுதிருக்கிறார். இச்சம்பவம்தான் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளியைப் பார்த்த பலரும், தி.மு.க. அரசின் அவலத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.