பா.ஜ.க.வுடன் ம.ஜ.த. இணைந்து செயல்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார்.
கர்நாடகாவில் ம.ஜ.த. மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியும், பா.ஜ.க. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, குமாரசாமி கூறுகையில், “கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்களவைத் தேர்தலுக்கு பின் சிக்கல் ஏற்படும். கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸூடன் கூட்டணி அமைக்காமல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால் நான் 5 ஆண்டுகள் பதவி வகித்திருப்பேன். காங்கிரஸார் என்னை மோசம் செய்துவிட்டனர்.
நான் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையை ஏற்காமல் போய்விட்டேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் எங்களது கட்சி இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவே பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறேன். காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்கள் பணியிட மாற்ற விவகாரத்தில் பல லட்சங்கள் ஊழல் நடந்துள்ளது. இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எங்கள் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா இந்த விஷயத்தில் எனக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதன்படி, விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை நான் அறிவிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.