அமைச்சர் செந்தில்பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல் என்று பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு காட்டமாகக் கூறியிருக்கிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு உத்தரவிட்டார். ஆனால், திடீரென அந்த உத்தரவை நள்ளிரவு நிறுத்தி வைத்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குஷ்பு, “கவர்னர் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்று விவாதிப்பதைவிட, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் செந்தில்பாலாஜி மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும். ஆனால், எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. இதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் வழக்கில் சிக்கி இருந்தால், அவரை நீக்கியே தீர வேண்டும் என்று ஊழல் கூட்டணி கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து இருக்குமே.
அதேசமயம், ஊழல் வழக்கில் சிக்கி ஒரு அமைச்சரே கைது செய்யப்பட்டு காவலில் இருந்தும், அவரை நீக்க வேண்டும் என்று எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்? பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியில் இருந்தால் ஊழல் செய்வது தப்பில்லை என்று அர்த்தமா? செந்தில்பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? அவர் முக்கியமானவர்களின் பெயர் விபரங்களை வெளியே சொல்லிவிடக் கூடாது என்று பயமா? ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.