லடாக்கில் ராணுவ வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யூனியன் பிரதேசமான லடாக்கின் பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 26 பேரை ஏற்றிக் கொண்டு, நேற்று காலை ராணுவ வாகனம் சென்றது. காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் இருந்து விலகிச் சென்று ஷியோக் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. சுமார் 50 முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில், ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் சம்பவ இடத்திலேயே 7 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்த 19 வீரர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள், விமானம் மூலம் சண்டிமந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிகிறது.