இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் படுவேகமாக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் வரிசையாக பாஜகவில் இணைந்து அதிர்ச்சிகொடுத்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி இன்று காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பாஜகவில் இணைந்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்” என்றார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விபாகர் சாஸ்திரி பாஜகவில் இணைந்துள்ளதால் அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.