‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) பிறந்த தினம் இன்று (ஜூலை 23).
இவர் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (1856) பிறந்தவர். தந்தை, பள்ளி துணை ஆய்வாளர். புனேயில் ஆரம்பக் கல்வி பயின்றார். கணிதம், சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கினார். புனே டெக்கான் கல்லூரியில் 1877-ல் பட்டம் பெற்றார்.
இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறையில் இருந்து மீட்பதற்காகவே சட்டப்படிப்பில் சேர்ந்தவர், 1879-ல் சட்டப்படிப்பை முடித்து, பல தேசபக்தர்களை சிறையில் இருந்து விடுவித்தார்.
கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் ‘கேசரி’ என்ற மராத்தி இதழையும், ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க கல்வி, பத்திரிகை, தேசிய இயக்கம் ஆகிய மூன்று அம்சங்கள் தேவை என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். இரண்டு பட்டங்கள் பெற்றிருந்த போதும், ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் அரசுப் பதவி எதையும் வகிப்பதில்லை என்பதில் அவர் உறுதி கொண்டிருந்தார். தேசபக்த உணர்வும், சிறந்த கல்வியும் இல்லாமல் சிறந்த நாட்டை உருவாக்க முடியாது என்ற தெளிந்த சிந்தனையோடு ஏழைகளுக்கு கல்வியறிவை விரிவுபடுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். இதற்காக பள்ளிகளை நிறுவியதோடு, பத்திரிகைகளையும் தொடங்கினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு மனு அளிக்கும் அமைப்பாக இருந்த காங்கிரஸை புரட்சிகர அமைப்பாக மாற்றுவதற்கு 1889 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவர் வித்திட்டார். இதனுடைய பரிணாம வளர்ச்சியாக 1904 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் போது, அந்தக் கட்சியில் மிதவாதத் தலைவர்கள், தீவிரவாதத் தலைவர்கள் என்ற இரு நிலைகள் உருவாயின. பாலகங்காதர திலகர், அரவிந்த் கோஷ், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் உள்ளிட்டோர் தீவிரவாத சிந்தனை கொண்டவர்களாக விளங்கினர்.
1916 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயராஜ்ஜியம் என்ற கோட்பாடுகளை முன்வைத்து அதன் வழியில் சுதந்திரப் போராட்டத்தை நடத்த மக்களுக்கு உத்வேகமூட்டினார்.
சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்ற திலகரின் ஆவேச முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இது விடுதலைப் போராட்டத்தை வேகப்படுத்தியது. திலகரின் தீரமும், தேசத்தின் மீதான பற்றும் நாட்டுக்கு விடுதலை கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தன. நவீன இந்தியாவின் சிற்பி பாலகங்காதர திலகர் என அவரது மறைவின்போது மகாத்மா காந்தி யங் இந்தியா இதழில் எழுதிய அஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திலகர் பிறப்பிலேயே ஓர் ஜனநாயகவாதி என்றும் கூறியுள்ளார்.
1914-ல் ஊர் ஊராகச் சென்று சுயாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1919-ல் இங்கிலாந்து சென்று இந்திய சுயாட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாலகங்காதர திலகர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1920 ஆகஸ்ட் 1-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார்.
பால கங்காதர திலகர் என்ற மாமனிதருக்கு நினைவாக சென்னையில் திலகர் திடல் அமைக்கப்பட்டது. அவரது 150-வது பிறந்தநாளின் போது மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
சந்திர சேகர ஆசாத் :-
இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad) பிறந்த தினம் இன்று (ஜூலை 23).
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் பிறந்தார் (1906). இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். இளமைப் பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருதம் கற்றார்.
15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரிடம் தந்தை பெயர், முகவரி என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன. தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார். கோபம் கொண்ட நீதிபதி ‘இவனை சிறையில் அடையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
உடனே ஆசாத், ‘நான் இவ்வாறு கூறினால்தான் நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன்’ என்று கூற, நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். மேலும் ஆத்திரமடைந்த நீதிபதி, ‘இவனுக்கு 15 பிரம்படி கொடுங்கள்’ என்று உத்தரவிட்டாராம். ஒவ்வொரு அடி விழும்போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கினார் இந்த வீர விளைஞர். இதற்குப் பிறகு இவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என்று அழைக்கப்பட்டார்.
முழுமையான சுதந்திரத்தை அடைய புரட்சிதான் சரியான வழிமுறை என முடிவுசெய்தார். இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். இந்த அமைப்பின் கொள்கைகள் இவரை மிகவும் கவர்ந்தன.
பிரிட்டிஷ் அரசு இந்துஸ்தான் குடியரசு அமைப்பை நசுக்கத் தீவிரமாக செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அனைவரும் இணைந்து, இந்த அமைப்பை ‘இந்துஸ்தான் சோஷ லிஸ குடியரசு அமைப்பு’ என்ற பெயருடன் மீண்டும் உயிர்ப்பித்தனர்.
இதன் ராணுவப் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்டார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். புரட்சியாளர்களுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் போர் பயிற்சிகளை அளித்தார்.
வைஸ்ராய் வந்த ரயிலை குண்டுவைத்து தகர்க்க முயற்சி செய்தனர், லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டனர். இவர் தலைக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. 1931-ல் துரோகி ஒருவன் துப்பு கொடுத்ததால் இவர் இருந்த இடத்தைப் போலீஸ் சுற்றி வளைத்தது.
உடனிருந்த சகாவை சாமர்த்தியமாகத் தப்பவைத்த இவர் போலீஸ் படையுடன் நீண்ட நேரம் போராடினார். காலில் குண்டடிப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. இவரது துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே இருந்ததால், எந்த நிலையிலும் பிடிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது, 24.
இவர் தன்னுயிர் ஈந்த இடமான ஆல்ஃபிரெட் பூங்காவுக்கு, ஆசாத் பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வீர இளைஞரின் நினைவைப் போற்றும் வகையில், பல பள்ளிகள், கல்லூரிகள், தெருக்கள், மற்றும் ஏராளமான பொது அமைப்புகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன.
விடுதலை போராட்ட வீரர்களான லோகமான்ய திலகர் மற்றும் சந்திர சேகர ஆசாத் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்களை வணங்கி பிரதமர் மோடி எக்ஸ் பதிவில்,
லோகமான்ய திலகரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தலைசிறந்த நபராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார், அவர் தேசியவாதத்தின் உணர்வைத் தூண்டுவதற்கு அயராது உழைத்தவர், அதே நேரத்தில் கல்வி மற்றும் சேவைக்கு முக்கியத்துவம் அளித்தார். புனேவில் கடந்த ஆண்டு லோகமான்ய திலக் தேசிய விருதைப் பெறும் பெருமையைப் பெற்ற நிகழ்ச்சியிலிருந்து எனது உரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சந்திரசேகர் ஆசாத் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் ஒரு அச்சமற்ற வீரராக திகழ்ந்தார், இந்தியாவின் சுதந்திரத்திற்கான அசைக்க முடியாத தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டார். அவரது இலட்சியங்களும் எண்ணங்களும் கோடிக்கணக்கான மக்களின், குறிப்பாக இளைஞர்களின் இதயங்களிலும் மனங்களிலும் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.