கடந்த சில தினங்களாக ஆன்மிக சொற்பொழிவாளரான மகாவிஷ்ணுவின் செய்திகள் தான் ஊடகங்கள் இணையத்தளங்களில் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆன்மிக பேச்சாளரான மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மகாவிஷ்ணுவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது: சென்னை அரசு பள்ளியில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை தான் அழைப்பு விடுத்துள்ளது. அவரை வைத்து எழுந்திருக்கும் சர்ச்சை முழுதுக்கும் அமைச்சர் மகேஷ் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என, அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால், தவறுக்குப் பொறுப்பேற்று, அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதை விடுத்து, ஆசிரியர்களை மாற்றம் செய்து, மகாவிஷ்ணுவை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு பேசியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க திமுக அமைச்சரான காந்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, கடந்த பிறவியில் அதிகம் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தைகளும், அதிகம் புண்ணியம் செய்தவர்களுக்கு பெண் குழந்தைகளும் பிறப்பதாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பள்ளி மாணவர்களிடையே பேசினார். மகாவிஷ்ணுவை கைது செய்தவர்கள் திமுக அமைச்சர் காந்தியை கைது செய்வார்களா ? என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக பொதுமேடையில், “நாங்க மதம் பரப்புறோம்ன்னு RSS காரங்க சொல்லிட்டு வராங்க. அவங்க சொன்னாலும் நாங்க பரப்பிட்டு வருவோம். வா வந்து என் ரெக்கார்ட பாரு, எத்தனை ஹிந்துக்களை நான் மதமாத்திருக்கேன் தெரியுமா ? நாங்க மதமாற்றி கொண்டு தான் இருப்போம்” என்று பகிரங்கமாக பேசியுள்ளார். பொதுமேடையில் மதமாற்றுவேன் என்று பேசிய கிறித்துவ பாதிரியாரை கைது செய்வார்களா ? என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.