ஹிந்து தர்மத்தின் பெருமைகளை உலகறிய செய்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் நேற்று (ஜூலை 4) அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல தலைவர்கள் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்ந்து அவருடைய படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய போதனைகள் கோடிக்கணக்கானோருக்கு பலம் தருகின்றன. அவருடைய ஆழ்ந்த ஞானமும், இடைவிடாத அறிவின் நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது. வளமான மற்றும் முற்போக்கான சமுதாயம் என்ற அவரது கனவை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் எக்ஸ் பதிவில், சுவாமி விவேகானந்தர் சமாதியடைந்த நினைவு நாளில் அவருக்கு ஆழ்ந்த நன்றியுடனும் மரியாதையுடனும் தேசம் இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறது. அவர் பாரதத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய தர்மத்தின் அழகையும் ஆழத்தையும் உலகிற்கு சக்திவாய்ந்த முறையில் நிரூபித்தார். மேலும் பல நூற்றாண்டுகள் அந்நிய ஆளுகைகளின் போது அழிக்கப்பட்ட தேசிய பெருமையை இந்தியர்களிடையே மீண்டும் தட்டியெழுப்பினார். இது காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலைக்கு வழிவகுத்த தேசத்தை வலுப்படுத்த உதவியது. அவருடைய ஆன்மிக பயணம் தமிழ்நாட்டின் புண்ணிய பூமியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. அங்கு அவர் ஞானமும் தேசிய நோக்க சிந்தனையையும் பெற்றார். வசுதைவகுடும்பகம் என்ற லட்சியத்துடன், பொருள் வளமும், ராணுவ வலிமையும், ஆன்மிக இரக்கமும் கொண்ட உண்மையான வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அவரது கனவை நனவாக்குவோம் என இந்த நன்னாளில் நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.