மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது வழங்காமலும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த 106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் பயன்படுத்தும், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு வழங்கினால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
தாங்களாகவே வந்து மாத்திரை, மருந்துகளை கேட்டால்,அதனை பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது. விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளுக்கு விற்பனை ரசீது வழங்க வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது.
இதை அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்து கண்காணித்து வருகின்றனர்.விதிமுறைகளை பின்பற்றாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 83 சில்லரை மருந்தகங்கள், 23 மொத்த மருந்தகங்கள் என 106 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்திலுள்ள 30,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பனை, விற்பனை ரசீது வழங்காதது, கருத்தடை மாத்திரை மற்றும் துாக்க மாத்திரை போன்றவற்றை விதிமீறி விற்பனை செய்தல் போன்றவற்றால் 106 கடைகளின் உரிம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரை விற்பனை செய்த 8 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூரில் 3 கடைகள் மூடப்பட்டுள்ளன. விதிமீறல்கள் விழுப்புரம், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது. தொடர்ந்து, கண்காணித்து வருகிறோம்” என்றனர்.