கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில பாஜக அரசு ‘லவ் ஜிகாத்’ தொடர்பாக சட்ட விரோத மதம் மாற்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது.
இந்நிலையில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்து உபி பாஜக அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாகவும், அபராத தொகை 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ‘லவ் ஜிகாத்’ வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கும் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தரப் பிரதேச துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், “இது போன்ற சட்டங்கள், ‘லவ் ஜிகாத்’ போன்ற நடைமுறைகளுக்கு எதிராக ஒரு ‘தடுப்பாக’ செயல்படும் என்பதால், இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டும்” என்றார்.