பட்டியலிட்ட அண்ணாமலை : அம்பலமான திமுகவின் உருட்டுகள் !

பட்டியலிட்ட அண்ணாமலை : அம்பலமான திமுகவின் உருட்டுகள் !

Share it if you like it

2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். ஏழைகள், பெண்கள், இளைஞர் திறன் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாய உற்பத்தி,திறன் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய 9 துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்தார். இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (பிக்கி) தலைவர் அனிஷ் ஷா பாராட்டு தெரிவித்தார்.

இவ்வாறு பலரும் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில்,

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?

தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

blank

Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *