பேருந்து நிலையம் மாற்றத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு : அமைச்சரின் காலில் விழுந்த மக்கள் !

பேருந்து நிலையம் மாற்றத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு : அமைச்சரின் காலில் விழுந்த மக்கள் !

Share it if you like it

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று மதியம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பெண்கள் சிலர், அழுதபடி அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அமைச்சர் அதனை கேட்டுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அனைவரும் அமைச்சரின் காலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்கள் அனைவரும் பெருங்களத்தூரை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சிறு, சிறு வியாபாரம் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், ஒட்டுமொத்தமாக பேருந்து அனைத்தும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் பெரிய அளவில் வருவதில்லை.. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முதலில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வந்தேன். பின்னர் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்தேன். தற்போது பேருந்து நிலையம் முழுமையாக கிளம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லை. பேருந்தும் வராத நிலையில், வியாபாரம் செய்ய முடியவில்லை கிட்டத்தட்ட 300 பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பேருந்து நிலையம்தான் எங்களது வாழ்வாதாரம். அதை நம்பி தான் நாங்கள் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்தோம். ஆனால், பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் தற்போது வருவதில்லை. பஸ் வராததால் பயணிகளும் வருவதில்லை. எனவே எங்களது குழந்தைகளை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Share it if you like it