கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு, நூலகத்திற்கான புத்தகங்களை வாங்காததால் புத்தக பதிப்பாளர்களின் வாழ்வாதாரம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக (2020-2024) புத்தக பதிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளதாக தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு பதிப்பாளர்களிடம் இருந்து எந்த புத்தகத்தையும் வாங்காமல் உள்ளது. இதுகுறித்து கடந்த நான்கு வருடங்களாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகத்திற்கான ஆர்டரை இதுவரை அரசு எடுக்காமல் உள்ளது. தமிழக பொது நூலக இயக்குனர் இளம் பகவத்திடம் இதுகுறித்து கேட்டபோது, நூலகங்களுக்கு புத்தகம் வாங்குதுதல் தொடர்பாக புதிய சாப்ட்வேர் துவங்கப்பட இருப்பதாகவும் இதில் வெளிப்படைத்தன்மையுடன் புத்தகம் வாங்கப்படும் என கூறியதாக சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4 ஆயிரத்து 500 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புத்தகங்கள் கேட்டு அரசிடம் இருந்து அழைப்பு வரும். பதிப்பாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை 15 பேர் அடங்கிய கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
கமிட்டிக்கு அனுப்பும் ஒவ்வொரு நூலுற்கும் ரூ.100 செலுத்த வேண்டும் ஆனால் கடந்த 4 வருடங்களாக எந்த அழைப்பும் வரவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திற்கு ரூ.100 என முன்பு கொடுத்திருந்தோம் தற்போது அந்தத் தொகை 450 ரூபாயாக மாற்றப்பட்டு இருக்கிறது மீண்டும் பழைய முறையான ரூ.100 அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றும் சண்முகம் கூறினார்.
ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படும் விலையை போன்று தமிழ் புத்தகங்களுக்கும் அரசு வழங்க வேண்டும். ஆங்கில புத்தகங்களுக்கு புத்தகத்தின் விலையில் தள்ளுபடி தவிர்த்து மீதி தொகையை அரசு வழங்குகிறது. ஆனால் தமிழ் புத்தகங்களுக்கு ஒரு பாராவிற்கு (16 பக்கங்கள்) ஏழு ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதை மாற்றி தமிழ் புத்தகங்களுக்கு ஒரு பாராவிற்கு 16 கேட்டிருக்கின்றோம்.
அரசும் தாமதம் இன்றி மாவட்ட தலைமை நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களுக்கு புத்தகங்களை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரு பதிப்பாளரிடம் இருந்து 1000-1500 புத்தகங்கள் வரை பெற முடியும். இதன் மூலம் புத்தக பதிப்பாளர்களும் பலனடைவார்கள்;புதிய எழுத்தாளர்களும் உருவாகும் சூழல் ஏற்படும் என்று பபாசி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.