லோக் சபா தேர்தல் : தமிழகத்தில் பாஜக பூஜ்யம் தொட்டதற்கு அண்ணாமலை காரணமா ?

லோக் சபா தேர்தல் : தமிழகத்தில் பாஜக பூஜ்யம் தொட்டதற்கு அண்ணாமலை காரணமா ?

Share it if you like it

2024 லோக் சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வுடனான கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளாமல் போனது பற்றிப் பலரும் விவாதிக்கிறார்கள். அந்த விவாதத்தின் மையம், பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னதாகத் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டதால், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியுமாக இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்கொண்டன, அதோடு தங்களுக்குள் ஒன்றை ஒன்றும் எதிர்த்தன. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரியில் ஒன்று, ஆக 40 லோக் சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யம்.

இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்? குறைந்த பட்சம், தமிழகத்தின் 13 தொகுதிகளில் அவர்களின் கூட்டணி நிச்சயம் வென்றிருக்கும், திமுக கூட்டணி தோற்றிருக்கும். ஏனென்றால், அந்த 13 தொகுதிகளில் இப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற ஓட்டுகளின் கூட்டு எண்ணிக்கை, திமுக கூட்டணி வேட்பாளர்கள் அங்கு ஜெயித்து வாங்கிய ஓட்டுகளை விட அதிகம்.

சென்ற இரண்டு தேர்தல்கள் போல இல்லாமல், லோக் சபாவில் பெரும்பான்மையைக் குறிக்கும் 272 தொகுதிகளை இந்த முறை பாஜக தனியாக எட்டவில்லை. இப்போது அது வென்றிருப்பது 240 தொகுதிகள் தான். பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் பெரும்பான்மை இலக்கைச் சற்றுத் தாண்டின. அவைகள் 293 இடங்களில் வென்று, பாஜக-வின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து அதற்கு 13 இடங்கள் கிடைத்திருந்தால், பாஜக-வுக்கு அது இன்னும் பலமாகும்.

மக்களவையில் பாஜக-வுக்குக் கூட்டணிக் கட்சிகளினால் கூடுதல் பலம் கிடைக்காமல் போனதற்கு, தமிழகத்தில் அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறைதான் காரணமா? மொத்தத்தில் இது பாஜக-வுக்கு நஷ்டமா? இதுதான் கேள்வி.

ஒரு கருத்து இது. அதிமுக பலமுறை திமுக-வைத் தோற்கடித்துத் தமிழகத்தில் ஆட்சி அமைத்த கட்சி. அது பாஜக-வை விட மாநிலத்தில் பெரிய கட்சி. அதிமுக-வின் தலைமையில் பாஜக ஒரு கூட்டணியில் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் பாஜக-தான் அதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும்.

இந்தக் கருத்தை விரிவாக்கி இன்னும் தெளிவாக ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக-விடம் எப்படிப் பணிவாக, பவ்யமாக நடந்துகொண்டு, அவ்வப்போது திமுக தலைவர் மனம் குளிரப் பேசி, தேர்தல் சமயத்தில் திமுக-விடம் அழுது கெஞ்சிக் கூடியவரை அதிகத் தொகுதிகள் பெற்று சமாதானப் படுகிறதோ, அது போல் பாஜக-வும் அதிமுக-விடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்திருந்தால், இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தமிழகத்தில் 13 இடங்களாவது கிடைத்து, அதில் பாஜக-வுக்கும் இரண்டோ மூன்றோ கிடைத்திருக்குமே?

திமுக-வின் விரலை சமர்த்தாகப் பிடித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி, ஆனால் அதிமுக-வின் கையை விட்ட அசட்டு பாஜக-வுக்கு மாநிலத்தில பூஜ்யம் என்றாகி விட்டதே? இந்த ரீதியில் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்தக் கருத்தின் இன்னொரு பக்கம் இது. அதிமுக-விடம் தமிழக பாஜக இணக்கமாக, பதவிசாக, பணிவாக நடக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தம்: தமிழக பாஜக-வின் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி நடக்கவில்லை என்று அர்த்தம். பிரச்சனை இங்குதான் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எம். ஜி. ஆர் இல்லை, ஜெயலலிதாவுமில்லை. மக்கள் செல்வாக்கு மிகுந்த எம். ஜி. ஆர் மறைந்த பின்னர், ஜெயலலிதா தனக்கென ஒரு மக்கள் செல்வாக்கை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த இரு தலைவர்களும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைக் கட்சித் தொண்டர்கள் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

பழனிசாமிக்கு, சொல்லும்படியாக மக்கள் செல்வாக்கு இல்லை. எம். ஜி. ஆர், ஜெயலலிதா இருவரும் தலைமை ஏற்ற அதிமுக-வின் இன்றைய தலைவராகப் பழனிசாமி இருப்பதால், கட்சியின் சின்னம் இரட்டை இலைக்காக, அந்தக் கட்சியின் தொண்டர்கள் அவர்மீது பேருக்கு ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

பாஜக-வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் முன்பிருந்த அதன் தலைவர்களை விட மிக அதிக மக்கள் செல்வாக்கைக் குறுகிய காலத்தில் பெற்றவர் அதன் இப்போதைய தலைவர் அண்ணாமலை. பாஜக-வின் ஏறுமுகம் அண்ணாமலை. அதிமுக-வின் இறங்குமுகம் எடப்பாடி பழனிசாமி.

திமுக என்கிற தீய அரசியல் சக்தியிடம் சாதாரண மக்கள் பொதுவாக அஞ்சிப் பணிந்து, கிடைப்பதை வாங்கி, அக்கட்சியை ஆதரிக்கிறார்கள். அந்தத் தீய சக்தியை நேருக்கு நேர் பார்த்துப் போராடி அடக்கி வைக்கும் ஆற்றல் அண்ணாமலைக்கு உண்டு என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் பெருகி வருகிறது. இதனால் அண்ணாமலைக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதுவரை ஆளும் கட்சியாக இல்லாத பாஜக-வுக்குத் தமிழகத்தில் ஆதரவு கூடி வருகிறது என்றால், பாஜக யாரை எதிர்க்கிறது, எந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவல்லது, என்று மக்கள் பார்த்து ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

பாஜக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால், அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கால் சொற்பமான தனது மக்கள் செல்வாக்கு இன்னும் சரியும், தனது கட்சிக்குள் தன்னுடைய மதிப்பும் குறையும் என்று கணக்கிட்டார் எடப்பாடி. அதனால் தனது சுயநலத்துக்காக, தனது அரசியல் கெத்து சிறிது காலம் நீடிக்க, அதிமுக-பாஜக உறவு முறிவதற்கு வழி வகுத்தார் எடப்பாடி. அது நடந்தது.

அதிமுக-விடம் பணிவும் பயமும் காட்டி, பேருக்குக் கட்சித் தலைவராக இருப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக-வைச் சாராமல் பாஜக-வை வளர்க்கும் தெம்பும் திராணியும் தலைமைப் பண்புகளும் அவரிடம் இருக்கின்றன. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் இந்த நிதர்சனத்தை அங்கீகரித்திருக்கிறது. அது இன்னும் முக்கியம்.

2019-ல், தமிழகத்தில் பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் 3.6 சதவிகிதம் இருந்தது. இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல், திமுக-வையும் எதிர்த்து நின்று, அது தனது ஓட்டு சதவிகிதத்தை 11.2 என்று உயர்த்திக் காண்பித்தது. இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு சதவிகிதம் சுமார் 6 குறைந்து, இப்போது 27 சதவிகிதம் என்று ஆகி இருக்கிறது.

பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது. இதை இப்போது ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதால் அந்தக் கட்சியின் மதிப்பு-மரியாதை மற்ற கட்சியினரிடமும் மக்களிடமும் உடனே கூடி இருக்கிறது. அண்ணாமலைக்கு, பாஜக தொண்டர்களுக்கு, இது இன்னும் உத்வேகம் அளித்துக் கட்சி மேலும் தனியாக வலுப்பெற உதவும். இந்த நிலையைத் தள்ளிப்போடாமல் இப்போதே – அண்ணாமலையின் 40 வயதிலேயே – அடைந்திருப்பது நல்லது. நீண்ட வளர்ச்சிப் பயணத்திற்கும் காலம் வேண்டுமே?

தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களவைத் தேவைகளை நாம் வேறுவகையில் பார்த்துக் கொள்ளலாம், என்று எண்ணி, அண்ணாமலையின் வீரியத் தலைமையை உணர்ந்து அவருக்குத் துணை நின்றார் பிரதமர் மோடி. எல்லாவற்றையும் கணக்கிட்டு, சில தருணங்களில் தைரிய முடிவு அவசியம் என்று மோடிக்கும் தோன்றியது.

தமிழக பாஜக சீராக விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு அண்ணாமலையின் அணுகுமுறை சரி என்று கட்சியின் தலைமை நம்புகிறது, அது அண்ணாமலைக்கும் தெரியும்.

கட்சித் தலைமையின் ஒப்புதலோடு, ஆதரவோடு, தமிழக பாஜக-வை வழி நடத்தும் அண்ணாமலையைத் தனியாக யார் எதில் பெரிதாகக் குறை சொல்ல முடியும்? பொழுது போகாதவர்கள் கணினி விளையாட்டுக்கள் விளையாடலாமே?

                           * * * * *

                           Author:
                R Veera Raghavan,     
                Advocate, Chennai

Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *