பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர்: வைரலான வீடியோ… தே.பா. சட்டத்தின் கீழ் வழக்கு!

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர்: வைரலான வீடியோ… தே.பா. சட்டத்தின் கீழ் வழக்கு!

Share it if you like it

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி மீது மர்ம நபர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் நேற்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம், சாலையோரம் ஒரு நபர் அமர்ந்திருக்க, இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே, அந்த நபர் மீது சிறுநீர் கழிக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில், இது எங்கு நடந்தது என்று பலரும் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் நடந்தது என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட நபர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் என்பதும், அவர் மீது சிறுநீர் கழித்தது பிரவேஷ் சுக்லா என்கிற நபர் என்பதும் அடையாளம் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு மேலாகிறது என்பதும், இது நேற்றுதான் வெளிச்சத்துக்கு வந்தது எந்பதும் தெரியவந்தது.

Madhya Pradesh man arrested for urinating on the tribal worker| மத்திய  பிரதேசத்தில் பழங்குடியின கூலி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் கைது!

இந்த வீடியோ வைரலான நிலையில், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், “சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ பரவி வருகிறது. ஒரு பண்பட்ட சமூகத்தில் பழங்குடியின இளைஞர் மீதான இத்தகைய கொடூரமான செயலை நிறைவேற்ற இடமில்லை. இச்சம்பவம் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேச மாநிலத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. இக்கொடுமையைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும், மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹஃபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் ஷூக்லா, சித்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் ரேவா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுக்லா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, “பழங்குடி நலன் பற்றி தவறாமல் பேசும் பா.ஜ.க. தலைவர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரிய செயல். முதலமைச்சர் சிவராஜ் அவர்களே, சித்தியில் இந்த சம்பவம் நடந்து 3 மாதங்களாகிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் இந்த பிரச்னையை எழுப்பிய பிறகே நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதுவரை உங்கள் அரசு தூங்கிக் கொண்டிருந்ததா?” என்று கேள்வி எழுப்பி இருப்பதோடு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேதார்நாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் | பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் கைது: தேசிய  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு | Madhya Pradesh man who urinated on  tribal labourer ...

இதற்கு பதிலளித்த கேதார்நாத் சுக்லா, “என் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அவரை தெரியுமே தவிர, அவர் பா.ஜ.க. தொண்டரோ அல்லது எனது பிரதிநிதியோ கிடையாது” என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், “கிரிமினல்களுக்கு ஜாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார். அதேபோல், மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்” என்றார்.

இந்த நிலையில், பிரவேஷ் சுக்லா என்கிற அந்த நபரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். வீடியோ வைரலாகி பிரச்னையான நிலையில், சுக்லா தலைமறைவானதாகவும், அவரை பல்வேறு இடங்களிலும் தேடி அதிகாலை 2 மணியளவில் கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.


Share it if you like it