பள்ளியில் காலை பிரேயரின்போது தேசிய கீதம் பாடி முடித்தவுடன், பாரத் மாதா கி ஜெய் என்று சொன்ன மாணவரை தரையில் அமர வைத்து தண்டனை கொடுத்திருக்கிறது கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளி முன்பு ஹனுமன் சாலிசா பாடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் வாபியில் செயின்ட் மேரி என்கிற பெயரில் கிறிஸ்த மிஷனரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் ஹிந்து மாணவர்கள் இருவர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதையறிந்த பள்ளி நிர்வாகம், இரு மாணவர்களையும் கடுமையாக தண்டித்திருக்கிறது. இதையடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கிறிஸ்தவ மிஷனரி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, செயின்ட் மேரி பள்ளியின் முதல்வர் சாவியோ கேத்தினோ, ஒழுங்குமுறை தலைவர் கல்பேஷ் பகத் ஆகியோர் இரு மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டனர். இதனால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளியின் காலை அசெம்பிளியின்போது பாரத் மாதா கி ஜெய் என்று சொன்ன மாணவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ம.பி. மாநிலம் குணா நகரில் கிறிஸ்ட் சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஷிவான்ஷ் ஜெயின் என்கிற மாணவர், கடந்த 3-ம் தேதி காலை பிரேயர் முடிந்து தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டதும், பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியின் ஆசிரியர் ஜஸ்டின், மாணவர் ஷிவான்ஷை தலைமை ஆசிரியர் தாமஸிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு அவர், இதையெல்லாம் உன் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளியில் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று கண்டித்து அனுப்பி இருக்கிறார்.
இதன் பிறகு வகுப்புக்கு வந்த மாணவர் ஷிவான்ஷை கடுமையாகத் திட்டிய வகுப்பு ஆசிரியை ஜாஸ்மினா காதுன், தனது வகுப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்ததாகக்கூறி, அம்மாணவரை தரையில் அமர வைத்திருக்கிறார். கடந்த 4 நாட்களாக இதேபோல் தரையில் அமர வைக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவர் ஷிவான்ஷ், வீட்டில் யாருடனும் பேசாமல் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் தனியாக இருந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் விசாரித்தபோது, நடந்த விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். இத்தகவல் அப்பள்ளியில் படிக்கும் இதர ஹிந்து பெற்றோருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளியில் குவிந்த பெற்றோரும், ஹிந்து அமைப்பினரும் பள்ளி முன்பு ஹனுமன் சாலிசாவை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், பெற்றோர் அளிக்கும் புகாரின்பேரில் பள்ளி நிர்வாகம் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனிடையே, பள்ளி நிர்வாகம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், நடந்த தவறுக்கு வருந்துகிறோம். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. தினமும் காலையில் பிரேயர் முடிந்து தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு, பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிடப்படும் என்று தெரிவித்திருக்கிறது.