கர்பா நடனம் நடக்கும் இடங்கள், லவ் ஜிஹாத் செய்வதற்கு வழிவகை செய்யும் இடங்களாக மாறிவிட்டன. ஆகவே, கர்பா நடன அமைப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர் கூறியிருக்கிறார்.
பாரதத்தைப் பொறுத்தவரை, கோடைகாலம் தொடங்கி விட்டாலே பண்டிகை காலமும் வந்துவிடும். தமிழகத்தில் சித்திரை மாதம் திருவிழாவோடு தொடங்கும் பண்டிகை காலம், தொடர்ந்து வட இந்திய பண்டிகைகளோடு நிறைவுபெறும். அந்த வகையில், தற்போது வட இந்தியாவில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக வட இந்தியாவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை வரவிருக்கிறது. இந்த நவராத்திரி விழாவை ஒட்டி, மத்தியப் பிரதேசத்தில் துர்கை பூஜை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். நிகழாண்டு துர்கை பூஜை பண்டிகை எதிர்வரும் 26-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இப்பண்டிகையின் 9-வது நாள் மத்தியப் பிரதேச மாநில மக்களின் பாரம்பரிய நடனமான கர்பா நடனம் நடைபெறும்.
இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், கர்பா நடனத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து உஷா தாக்கூர் கூறுகையில், “தற்போது லவ் ஜிஹாத் பிரச்னைகள் அதிகமாக நடந்து வருகிறது. கர்பா நடனம் நடக்கும் இடங்கள், தற்போது லவ் ஜிஹாத் நிகழ வழிவகை செய்யும் இடங்களாக மாறிவிட்டன. ஆகவே, கர்பா நடனத்தை பார்வையிட வரும் ஒவ்வொருவரும் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். மேலும், கர்பா நடன அமைப்பாளர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் எவருக்கும் அனுமதி இல்லை. இது எல்லோருக்கும் பொருந்தும்” என்று கூறியிருக்கிறார். உஷா தாக்கூர் எம்.எல்.ஏ.வாக இருந்த 2014-ம் ஆண்டு காலக்கட்டத்தில், அவரது தொகுதிக்குட்டப்பட்ட இடங்களில் நடக்கும் கர்பா நடனத்தை பார்வையிட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.