வழக்கு டிஸ்மிஸ்: ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு!

வழக்கு டிஸ்மிஸ்: ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு!

Share it if you like it

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்ததோடு, நீதிபதிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 23 நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், விக்டோரியா கவுரி நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதாவது, கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை சமூகவலைதளத்தில் பேசியதாக விக்டோரியா கவுரி மீது புகார் கூறி, அவர் நீதிபதியாக பதவியேற்க வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது, அரசியல் பின்புலம் கொண்டவர்கள் ஏற்கெனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது என்று நீதிபதி தெரிவித்தனர். இதற்கு, இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி குறித்து எவ்வித கேள்வியும் இல்லை. விக்டோரியா கவுரியின் வெறுப்பு பேச்சுகள்தான் கவலை அளிக்கிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரைக்கு முன்பாக அவரது உரையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும் என்றும் மனுதாரர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நான் மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை. இது விக்டோரியா கவுரிக்கும் பொருத்தலாம்தானே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தற்போதுள்ள நிலையில் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it