நமது கடவுள் விநாயகர் பெருமானை பற்றி குறைத்துப் பேசும் நடிகர் விஜய் நடித்த படத்தை பார்காதீர்கள் என்று மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், கடந்த 4, 5-ம் தேதிகளில் மதுரையில் துறவியர் மாநாடு நடந்தது. நிறைவுநாளான நேற்று மாலை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், துறவியர், ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்று துறவியர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் பேசிய ஆதீனங்கள் பலரும், கோயில்களின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்பன போன்ற கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். நடராஜரை அவமானப்படுத்தியவனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத மாற்றத்தால் தேசத்துக்கு அபாயம் ஏற்படுகிறது. ஹிந்து மதத்திற்கு விரோதமாக பேசுபவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத் தர வேண்டும். அறநெறி வாழ்வையும், நீதிகளையும் கல்வி திட்டத்தில் பாடமாக வைக்க வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தி நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் கோசாலை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.
விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பிராண்டே பேசுகையில், “இஸ்லாமியர்கள் ஹிந்துகளுக்கு சவால் விடுகின்றனர். கேரளாவில் பி.எஃப்.ஐ. ஊர்வலத்தில் இந்துகள் சாவதற்கு தயாராக இருங்கள் என்று கூறுகின்றனர். மேற்குவங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹிந்துகள் தாக்கப்படுகிறார்கள். தமிழகத்திலும் ஹிந்துக்களும், ஹிந்து தெய்வங்களும் நிந்திக்கப்படுகின்றனர். ஹிந்துக்கள் எதற்கும் யாருக்கும் பயப்படக் கூடாது. நம்மை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
நிறைவாகப் பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், “அன்று ‘பாருக்குள்ளே நல்லநாடு பாரத நாடு’ என்று பாரதியார் பாடினார். இன்று பாரதியார் இருந்திருந்தால், ‘செந்தமிழ் நாடெனும் போதினேலே, டாஸ்மாக் பாயுதே நாட்டினிலே’ என்று பாடியிருப்பார். திராவிட பாரம்பரியம் என்று கூறுகிறார்கள். ஆனால், விபூதி பூச மறுக்கிறார்கள். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்துப் பேசுகிறார். ஆகவே, அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள். ஹிந்து என்றால் திருடன் என்றார்கள். சமயபுரம் மாரியம்மனை துஷ்ட தேவதை என்று கூறுகின்றனர். ஆனால், அக்கோயிலின் உண்டியல் வசூல் மட்டும் இனிக்கிறதா? ஆகவே, பக்தர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள். அன்று, கால் ரூபாய் தெரியாமல் வாங்கியதற்காக தனது மருமகன் தலையை வெட்டினான் மன்னன். ஆனால் இன்று அப்படியா..? அறநிலையத்துறை அறம் இல்லாமல் உள்ளது. ஆகவே, ஹிந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு, கோயில் நிர்வாகத்தை நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்”.என்றார்.