அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வெளிப்படையாக போட்டுடைத்த நபரை, கூட்டத்தில் இருந்து அமைச்சர் வெளியேற்றிய சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர்கள் கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கான்ட்ராக்டர்கள் தரமற்ற முறையில் கட்டடங்கள், கழிவுநீர் கால்வாய்களை கட்டி, அவை ஒரு சில தினங்களில் இடிந்து விழுந்த அவலமும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட, தரமற்ற முறையில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக, கருத்துக்கேட்புக் கூட்டத்தில் ஒருவர் குற்றம்சாட்ட, கூட்டமே பரபரப்பாகி இருக்கிறது.
மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 21 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், 21 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில்தான், லஞ்சம் வாங்குவது குறித்து அமைச்சர் முன்னிலையிலேயே போட்டுடைத்தார் ஒருவர். அதாவது, மேடையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அமர்ந்திருக்க மேடையேறிய நபர் ஒருவர், மாநகராட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். பிளான் அப்ரூவலுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார் மாநகராட்சி அதிகாரி அலாவுதீன் என்று பொதுமக்கள் மத்தியில் போட்டுடைத்தார் அந்த நபர். இதனால், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திடீர் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, அந்த நபரை மேடையிலிருந்து வெளியேற்றும்படி அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, பேசிக் கொண்டிருந்த அந்த நபரை, அவசர அவசரமாக வெளியேற்றினார்கள் தி.மு.க.வினர். அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.