நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன். என்னால் அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2021 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் முட்டல் மோதல் இருந்து வருகிறது. காரணம், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சிப் பதவிகளை எல்லாம் தி.மு.க.வினரே அபகரித்துக் கொண்டதுதான். தவிர, பதவி கிடைக்காததால் தி.மு.க. உட்கட்சிக்குள்ளேயும் நிர்வாகிகளுக்குள் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில்தான், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன். எப்போது வேண்டுமானாலும் அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு செல்ல முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தி.மு.க. தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மதுரையில் கறி விருந்து நிகழ்ச்சியை நடத்தினார். இதில், மதுரை மாவட்டச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட கோ.தளபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. காரணம், மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதலை செந்தில் என்பவரை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், அவர் நிராகரிக்கப்பட்டு பெரும்பாலான மதுரை மாநகர நிர்வாகிகள் ஆதரவோடு கோ.தளபதி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை மனதில் கொண்டுதான், கறிவிருந்து நிகழ்ச்சி தளபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “தி.மு.க.வில் சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்கக் கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. நான் என்றைக்குமே, நீ அவரைப் போய் பார்க்காதே, அவர் பெயரை போடாதே, அவர் போட்டோ போடாதே, அவர் நிகழ்ச்சிக்குப் போகாதே என்று சொல்ல மாட்டேன். காரணம் நான் பெரிய மனிதன். அதேபோல, எனக்காக போஸ்டர் அடி, என் பெயரை போடு, என் போட்டோ போடு என்றும் சொல்ல மாட்டேன். காரணம், நான் பெரிய மனிதன். ஆகவே, பெருந்தன்மை இன்றி அற்ப விஷயங்களுக்காக நீங்கள் சிறிய மனிதர்களாகி விடாதீர்கள். என்னால் பலன் பெற்று நன்றி இன்றி இருப்பவர்கள் இன்றும் மதுரையில் இருக்கிறார்கள்.
என்னால் அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு எப்போது வேண்டுமானாலும் போக முடியும். அப்படிச் சென்றால் இதை விட அதிகமாகவே சம்பாதிக்க முடியும். தவிர, நான் பொருளாதார சுதந்திரம் வைத்திருப்பவன். அதனால், யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கையேந்தவும் மாட்டேன். அதேசமயம், சிலரிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், இன்னும் வேண்டும் என்கிற பேராசையில் இருக்கிறார்கள். நான் யாருக்கும் அடிமை இல்லை” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இவ்வாறு பி.டி.ஆர். பேசியிருப்பது மதுரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலுள்ள தி.மு.க.வினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தளபதியை மட்டும் மனதில் வைத்தி பி.டி.ஆர். இவ்வாறு பேசினாரா அல்லது தி.மு.க. தலைமை உள்ளிட்ட அனைவரையும் மனதில் வைத்துப் பேசினாரா என்று பட்டிமன்றம் நடத்தாக குறையாக விவாதித்து வருகிறார்கள் தி.மு.க.வினர்.