பட்டியல் சமூக மக்கள் நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்த நிலையில், தற்போது மதுரையில் உயர் நீதிமன்ற கிளையை அமைத்துக் கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் வாய்க்கொழுப்பாகவும், திமிராகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி ஓசி பஸ், நீ எனக்கு ஓட்டுப் போட்டியா, நீ எஸ்.சி.தானேம்மா, வாயை மூடிக்கிட்டு போய்யா என்று வாய்த்துடுக்காக பேசிய சம்பவங்கள் நினைவிருக்கலாம். அதேபோல, அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கவுன்சிலரை தலையில் அடித்தது, சென்னை மேயரை ஒருமையில் பேசியது என பல்வேறு சம்பவங்களை கூறலாம். அமைச்சர் துரைமுருகனை பற்றி கேட்கவே வேண்டாம். அதேபோல, பேச்சாளர்கள் வரிசையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாயைத் திறந்தாலே கூவம் நாற்றம்தான்.
தற்போது இவர்களது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலுவும் இணைந்திருக்கிறார். மதுரையில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. நகரச் செயலாளர் எம்.எல்.ஏ. தளபதி தலைமை வகித்தார். அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, “கருணாநிதியின் 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எந்த தேர்தலிலும் தோல்வியடையாத ஒரே தலைவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில் உள்ளதோ இல்லையோ குடிநீர் தொட்டிகளை ஏற்படுத்தினார்.
ஆன்மிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மிகத்திற்கு எதிரானவர்களாக காண்பிக்க எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால், அது நடக்காது. திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மிகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்கள் நண்பர்கள்தான்.
தென் மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. எனவே, மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர் நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இது அவர் போட்ட பிச்சை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கவும் அவரே காரணம். அவரைப் போலவே தற்போது ஸ்டாலின் செயல்படுகிறார்” என்றார். ஏற்கெனவே, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை கருணாநிதி போட்ட பிச்சை என்று வேலு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தியாகராஜன் பேச அனுமதி மறுப்பு
நிகழ்ச்சியில் எம்,எல்.ஏ. தளபதி பேசிய பிறகு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக இருந்தது. ஆனால், அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, தியாகராஜனை பேச அழைக்குமாறு அமைச்சர் வேலு கூறினார். ஆனாலும், தியாகராஜன் பேச அழைக்கப்படவில்லை. இதையடுத்து, மதுரை அரசியல் நிலவரத்தை’ புரிந்துகொண்ட அமைச்சர் வேலு, தியாகராஜன் பேச வேண்டிய நேரத்தையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி சமாளித்துவிட்டு பேச்சை தொடங்கினார். அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாத விஷயம், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.