மதுரை அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான முத்துராமன், நிர்வாகத்தில் தலையிட்டு மிரட்டுவதாகக் கூறி, 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது கோவிலாங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஜெயந்தி. இவரது கணவர் முத்துராமன். இவர், செல்லம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். தனது மனைவி ஊராட்சித் தலைவராக இருப்பதால், கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முத்துராமனின் தலையீடு அதிகம் இருந்திருக்கிறது. மேலும், ஊராட்சி உறுப்பினர்களையும் மிரட்டி வந்திருக்கிறார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த வார்டு உறுப்பினர்கள், தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்ற 6 பேரும், கலெக்டர் சங்கீதாவை சந்தித்து, தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதத்தை கொடுத்தனர். இத்தகவல் வெளியில் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வார்டு உறுப்பினர்கள், “கோவிலாங்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாட்கள் வேலைத் திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற லஞ்சம் பெறப்படுகிறது. இதுகுறித்து நாங்கள் தட்டிக் கேட்டதால் எங்களை தகுதி நீக்கம் செய்யப் போவதாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், தி.மு.க. செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளருமான முத்துராமன் மிரட்டுகிறார். எனவே, நாங்களே எங்களது பதவியை ராஜினாமா செய்தோம்” என்றார்கள்.