மாநகராட்சி ஊழியர் ஒருவரை தனது கைப்பையை தூக்கவைத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மதுரை மேயர் இந்திராணி.
மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி பொன்வசந்த். இவர் மீது ஏராளமான புகார்கள் றெக்கை கட்டுகிறது. இவரது பதவியேற்பு விழாவிலேயே மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. காரணம், இவர் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்பதுதான். இதனால், இவரது பதவியேற்பு விழாவை வருவாய்த்துறை அமைச்சர் மூர்த்தி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் தளபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்து விட்டனர். இதன் பிறகும், மாநகராட்சி மேயர் இந்திராணியின் மீதான சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை. இவரது கணவர் பொன்வசந்த் ஆக்டிங் மேயராக வலம் வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தவிர, மேயருக்கு என சிறப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திலேயே மதுரை மாநகராட்சியில்தான் என்பதும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அதேபோல, தி.மு.க. மேயருக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்ததும் இங்குதான் என்கிற புகாரும் இருக்கிறது. மேலும், அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று தி.மு.க.வைச் சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு மேயர் மீது சொந்தக் கட்சியினரே வெறுப்பில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில்தான், மாநகராட்சி ஊழியர் ஒருவரை தனது கைப்பையை தூக்க வைத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மேயர் இந்திராணி.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான அதிநவீன குறைதீர் அலுவலக திறப்புவிழா நடந்தது. இவ்விழாவுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆகவே, அமைச்சருக்காக மேயர் இந்திராணி மாநகராட்சி அலுவலக வாயிலில் காத்திருந்தார். அப்போது, அவரது கைப்பையை (ஹேண்ட் பேக்) மாநகராட்சி ஊழியர் ஒருவர் சுமந்து கொண்டிருந்தார். அலுவலக திறப்பு விழா முடிந்து அமைச்சரும், மேயரும் புறப்பட்டுச் செல்லும்போது, ஓடி வந்து மேயரின் கைப்பையை கொடுக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் தனியார் செய்திச் சேனலைச் சேர்ந்த நிருபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும், மேயருக்கு சிறப்பு ஆலோசகர் நியமித்ததுபோல, கைப்பை தூக்கவும் புதிதாக ஊழியரை நியமித்திருக்கிறார்களே என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.