மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஜாதி ரீதியிலான பல்வேறு தீண்டாமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று தீண்டாமை கொடுமை செய்த, தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். தவிர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சிப் பதவிகளில் தலைவர், கவுன்சிலராக இருக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊராட்சி தலைவர்களாக இருக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமர்வதற்கு நாற்காலிகூட தராத கொடுமை நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தது.
அவ்வளவு ஏன், அமைச்சர்களே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுவெளியில் அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை மேடையிலேயே ஏம்மா நீ எஸ்.சி. தானே என்று கேட்டு அவமானப்படுத்திய சம்பவம் அரங்கேறியது. அதேபோல, அமைச்சர் துரைமுருகன் ஒரு மேடையில் பேசும்போது, தன்னிடம் பெரியார் ஜாதியைப் பற்றி கேட்டதாகவும், அதற்கு தான் வன்னியர் என்று சொன்னதாகவும், அதற்கு அவர் அப்படின்னா நீயும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன்தான் என்று சொன்னதாகவும் சொல்லி, பட்டியல் சமூகத்தினரை கேவலப்படுத்தினார். அதேபோல, எம்.பி. தயாநிதி மாறன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் எங்களை அவமரியாதை செய்து விட்டார். நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா என்று கேட்டு பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தினார்.
இந்த நிலையில்தான், மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்டிருக்கும் கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது பருவத் தேர்வு நடந்து வருகிறது. அந்த வகையில், 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பருவத் தேர்வு நேற்று நடந்தது. இக்கேள்வித் தாளில் மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத ஜாதியாக இருந்தது எது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி கேள்வி கேட்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் முதுகலை வரலாற்றுத் துறையின் தமிழ்நாடு விடுதலைப் பாடத்தில், தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, திராவிடர் கழகமும், தி.மு.க.வும்தான் ஜாதியை ஒழித்தது என்று பீற்றிக்கொள்ளும் தி.மு.க.வினர்தான் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.