மதுரை அருகே கட்டி முடித்து 2 மாதங்களேயான அரசுப் பள்ளி கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதோடு, சுவரை சுரண்டினால் சிமென்ட் பூச்சு கையோடு உதிர்ந்து வரும் நிலையில், மாணவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பன்னியான் ஊராட்சி. இங்கு அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இடப்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த இப்பள்ளிக்கு, புதிதாக 2 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பள்ளி கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இக்கட்டடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவில்லை. எனினும், ஒரு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், சிமென்ட் பூச்சுகள் தொட்டாலே உதிர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன், பள்ளி கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் காணப்படுவதைக் கண்ட அவர், சுவரை சுரண்டி பார்த்தபோது சிமென்ட் பூச்சு கையோடு பெயர்ந்து வந்தது. பின்னர், இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, அரசுத் துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்து ஆடுவதோடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, மற்றொரு புறம், கான்ட்ராக்ட் என்கிற பெயரில் தரமற்ற கட்டடங்களை கட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதேசமயம், பள்ளி கட்டடத்தை இப்படி தரமற்று கட்டி மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.