பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது 6 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) என்கிற இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முதல் மாநாடு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இக்பால் மைதானத்தில் நடந்த இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆரிப் மசூத் என்பவர்தான். இம்மாநாட்டில் ‘நீதி, அமைதி, நமது பொறுப்புகள்’ என்கிற தலைப்பில் பேசிய ஆரிப் மசூத், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசினார்.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஷம்சுல் ஹசன் பல்லி என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரில், “எங்கள் பிரதமரை மேடையில் அசிங்கப்படுத்திய ஆரிப் மசூத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், அரசியலமைப்பைவிட பெரியவர் யாரும் இல்லை. அந்த வகையில், மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஆகவே, அவர் மீது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது புகாரை ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் மாநில அரசு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். ஆனால், இப்புகார் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், ஆரிப் மசூத் மீது போலீஸார் 6 வருடங்களுக்குப் பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறுகையில், “இது நிர்வாகச் செயல்பாடு. சட்டம் தனது கடமையைச் செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். எத்தனை வருடங்களானாலும், இதுபோன்ற குற்றங்களை அலட்சியமாக விடமுடியாது” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸோ, “மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆனால், ஆரிப் மசூத் மட்டும் குறிவைக்கப்பட காரணம், அவர் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பதால்தான். இது எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கான வழி. இந்த பழிவாங்கும் கொள்கை தொடர்ந்தால், அவர்கள் மீண்டும் மக்களால் உதைபடுவார்கள்” என்று திமிராகக் கூறியிருக்கிறார்.