அமைச்சரவையில் சிவனுக்கு இருக்கை: ம.பி. முதல்வர் கவுரவம்!

அமைச்சரவையில் சிவனுக்கு இருக்கை: ம.பி. முதல்வர் கவுரவம்!

Share it if you like it

அமைச்சரவையில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கி கவுரப்படுத்தி இருக்கிறார் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயில் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமானதாகும். இக்கோயிலைச் சுற்றி 900 மீட்டர் தூரத்துக்கு 851 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு. முதல்கட்டமாக 351 கோடி ரூபாய் செலவிலான பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக, உஜ்ஜைனியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்தான் முதன்முறையாக `மகாகாலேஷ்வர்’ படம் வைக்கப்பட்டு, அவருக்கு தனி இருக்கையும் போடப்பட்டிருக்கிறது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “இது மகாகால் அரசு. இங்கு அவர்தான் மன்னர். மகாகாலேஷ்வரின் மண்ணில் கூட்டம் நடத்தவே அவரது ஊழியர்கள் இங்கு வந்திருக்கிறோம். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்றதொரு கூட்டம் நடத்தப்படுகிறது. மகாகாலேஷ்வரை உஜ்ஜைன் நகர மக்கள் தங்கள் மன்னராகவே நம்புகின்றனர். முதல்கட்டமாக 351 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பகுதிக்கு `மகாகால் லோக்’ என்று பெயரிடப்படும். அக்டோபர் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும். ஆரம்பத்தில் இத்திட்டம் 95 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. பின்னர், இது 856 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடையும்போது காசி விஷ்வநாதர் கோயிலைவிட 4 மடங்கு பெரிதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரவையில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட சம்பவம், உஜ்ஜைன் நகர மக்கள் மட்டுமல்லாது மாநில மக்கள் அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


Share it if you like it