தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், திடீரென பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து 28 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறியதால், மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், ஆட்சியமைக்கத் தேவையான பலத்தை இக்கூட்டணி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை கைப்பற்றினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
இக்கூட்டணியின் இரண்டரை ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்த நிலையில், கடந்தாண்டு 40 எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனாவிலிருந்து அதிரடியாக வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார் ஏக்நாத் ஷிண்டே. இதன் பிறகு, பா.ஜ.க., சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியைக் கைப்பற்றியது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அஜித் பவார் இன்று 28 எம்.எல்.ஏ.க்களுடன் ராஜ்பவனுக்கு சென்று துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், இவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருக்கும் நிலையில், அவருக்கே தெரியாமல் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார்.