மகாராஷ்டிரா விரைவு சாலையில் ஓடும் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் உள்ள யவமத்மாலில் இருந்து நேற்று இரவு புனே நோக்கி 33 பயணிகளுடன் பஸ் ஒன்று கிளம்பியது. சமீபத்தில் அமைக்கப்பட்ட சம்ருத்தி மகாமார்க் சாலையில் இன்று அதிகாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2 மணியளவில் புல்தானா என்கிற இடத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பஸ்சின் டயர் ஒன்று வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததில் டீசல் டேங்க்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மேலும், பஸ் இடபுறம் கவிழ்ந்ததால் படிக்கட்டு இருக்கும் பகுதி கீழ்புறமாக மாட்டிக் கொண்டது. இதனால், பயணிகள் அனைவரும் வெளியேற முடியாமல் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டனர். பஸ்ஸில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும்ம், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, இரு துறையினரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனினும், பஸ் டிரைவர் உட்பட 8 பேர் மட்டுமே பலத்த காயத்துடன் உயிரோடு மீட்கப்பட்டனர். மற்ற 25 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என்பதுதான் சோகம். காயமாடைந்த 8 பேரும் புல்தானா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகள் நாக்பூர், வார்தா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.